கலைஞனின் அகம் கணணியில் முகம்...
கணவன் இல்லாது இந்த உலகில் வாழ்வது கொடிது பெண்களுக்கு வீட்டிலும் சரி நாட்டிலும் சரி பலவிதமான சொல்ல முடியாத துன்பங்கள் துயரங்கள் தான் வாழ்க்கையாகி உள்ளது..........
கலைஞனின் அகம் கணணியில் முகம் விம்பம் பகுதியில் நம்மோடு பேச வருகிறார் தலைமன்னார் மண்ணின் பெருமை பனைசார் உற்பத்தி கைப்பணிப்பொருட்கள் பரிசு பெற்ற கைவினையாளர் எயிட்ஸ் தொற்று நோய் விழிப்புணர்வு பயிற்சி ஆசிரியர் லெதர் பயிற்சி ஆசிரியர் உதயம் கைப்பணி அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் என தன்னை சேவையில் ஈடுபடுத்தி செயலாற்றி வரும் M.கவிதா அவர்களின் அகத்திலிருந்து…..
தங்களைப்பற்றி--------------------
எனது பிறப்பிடமும் வசிப்பிடமும் தலைமன்னார் கிராமத்தின் படப்படி எனும் கிராமத்தில் எனது தந்தை பால்சாமி சுந்தர்ராஜன் எனது தாய் சுந்தர்ராஜன் ராமாஜி திருமணமாகி எனது மகனுடன் படப்படியிலே பனை கைவினைப்பணியில் ஈடுபட்டு வருகின்றேன.எனது கணவர் 2006ம் ஆண்டு யுத்த சு10ழலில் காணமல் போனார் அத்தருணத்தில் தான் எனக்கு மகன் பிறந்தான் இன்னும் எனது கணவரின் நிலை என்னவென்று அறியமுடியவில்லை எதிர்பார்த்திருக்கின்றேன்.
கைப்பணி எவ்வாறு கற்றுக்கொண்டீர்கள்--------
திருமணம் செய்தபின்பு எனது கணவர் காணமல் போகவும் எனது குடும்பத்தினை அதாவது வயது வந்த அப்பா வருத்தக்கார அம்மா எனது மகனின் கல்விச்செயற்பாடு இவற்றுக்காண பணம் அதிகமாக தேவைப்பட்டது அதனால் கட்டாயம் கைப்பணி வேலையினை பழகிட வேண்டும் என்பதற்காக எனக்கு முதலே தெரிந்து இருந்ததாலும் வைக்குறோ நிறுவனத்தின் எனது பயிற்சியை கைப்பணி மற்றும் லெதர் பயிற்சியை முடித்துக்கொண்டு சுயதொழிலாகவும் கைத்தொழிலாகவும் செய்ய தொடங்கினேன் செய்துவருகின்றேன்.
இத்தொழில் வருமானம் தரும் தொழிலாக இருக்கின்றதா---???
வருமானம் என்பதை விட வாழ்வாதாரத்தினை கொண்டு செல்வதற்கு கைகொடுக்கின்றது. கைத்தொழில் ஒன்றைக்கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்பது போல….இப்போது எனது அப்பாவும் இறந்து விட்டார் எனது தாயும் எனது மகனுக்கான செலவினை ஈடுசெய்ய இந்த தொழிலே கைகொடுக்கின்றது.
நீங்கள் மட்டும் தான் கைப்பணியில் ஈடுபடுகின்றீர்களா---
இல்லை இல்லை எமது கிராமத்தில் ஆரம்பத்தில் நானும் ஆறுபெண்களுமாக இணைந்து உதயம் பெண்கள் கைப்பணி மையம் ஒன்றை ஆரம்பித்து செயற்பட்டு வந்தோம் அது பல இன்னல்கள் பிரச்சினைகள் துன்பங்கள் கடந்து சந்தித்து இன்று 62பெண்களை கொண்டு உதயம் கைப்பணி அபிவிருத்தி சங்கம் பெயர்மாற்றம் பெற்று வளர்ச்சி கண்டுள்து இன்னும் வளரும்.
21-23-10-2016 மூன்று நாட்கள் நடைபெற்ற ஞாலத்தில் புதுமை புகும் தாலம் பனைவளம் சார் கண்காட்சிப்போட்டியில் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்றுள்ளீர்களே அது பற்றி---
ம்ம்ம் மகிழ்ச்சியாகவுள்ளது இதற்கு காரணம் எனது கைப்பணி ஆசான் பாவிலாஜி அவர்களைத்தான் சொல்ல வேண்டும் அவர் ஒரு ஆசானாக மட்டுமல்ல ஒரு தாயாக எனக்கு எல்லாவிதத்திலும் உதவி செய்வதோடு ஆலோசனையும் வழங்கி என்னை நல்வழிப்படுத்தும் நல்ல ஆசான் அவரால் தான் எனக்கு இந்த இடம் கிடைத்தது என்பேன்.
இதுதான் முதல் போட்டி என்றீர்கள் இதற்கு முன்பு போட்டிகளில் கலந்து கொள்ளவில்லையா….
நான் 14ஆண்டுகள் கைப்பணியில் தொழிலாக ஈடுபட்டுவந்தாலும் போட்டிகளில் கலந்த கொள்ளவில்லை காரணம் ஆரம்பப்பயிற்சியை கெடற் நிறுவனத்தின் மூலம் கற்றாலும் அவர்கள் அதற்கான சான்றிதழ் தரவில்லை அத்தோடு எனது கல்வித்தரமும் குறைவாக இருந்ததினால் திறமையிருந்தும் ஒருவிதமனப்பயத்துடன் பின்வாங்கி நின்றேன். தற்போது கொஞ்சம் தெளிவு பெற்றுவிட்டேன் கலந்து கொண்ட முதல் போட்டியிலே முதல் இடத்தினை பெற்றுள்ளேன் இனி போட்டிகளில் கலந்து எனது திறமையினை நிருபிப்பேன்.
ஆரம்பகால உங்கள் கைப்பணி விற்பனை பற்றி-
ஆரம்பத்தில் எங்கள் குழுவினரால் செய்யப்படகின்ற பொருட்களை தலைமன்னார் பொலிஸ்நிலையத்தின் அருகில் வைத்துதான் அவர்களின் உதவியுடன் விற்பனை செய்து வந்தோம். சுற்றுலா வருகின்ற சிங்கள மக்கள் அதிகமாக எமது பொருட்களை வாங்குவார்கள் பொலிஸ் அதிகாரிகளும் தங்களது வீட்டிற்கு செல்லும் போது சில பொருட்களை சொல்லி செய்து வாங்கிச்செல்வார்கள் அப்படியாக இருக்கும் போது தான் எமக்கு…
உங்கள் கைப்பணியினை மேற்கொள்வதற்கு அலுவலகம் உள்ளதா….ஆம் உள்ளது எமது இடைவிடாத முயற்சியால் மதிப்பிற்குரிய திருமதி.திருமகள் பனைவள அதிகாரியின் முயற்சியாலும் பலரின் ஒத்துழைப்பாலும் எமக்கானதொரு கட்டிடத்தினை 1400000 இலட்சம் ரூபா செலவில் அமைத்து தந்துள்ளார்கள் பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களும் மிசினும் இதரப்பொருட்களும் வாங்கித்தந்தார்கள் செயற்படுகின்றோம்.
கைப்பணியினை ஒருவர் முழுமையாக பழகிக்கொள்ள எத்தனை நாட்கள் தேவை எவ்வளவு செலவாகும்….
ஒருவர் முழுமனதுடன் கைப்பணியை பழகுவதற்கு சரியாக ஆறுமாதங்கள் தேவை பழகுவதற்கு தேவையான பொருடகள் ஓலை தவிர்ந்து மிசின்தேய்மானம் ஆசிரியர் சம்பளம் எல்லாமாகதேர்த்து 40000 ரூபா முடியும்.
கைப்பணியினை உங்கள் அமைப்பின் ஊடாக கற்றுக்கொடுக்கின்றீர்களா…
ஆம் கற்றுக்கொடுக்கின்றோம் 20பெண்களுக்கு அதுவும் இலவசமாகவே பனையோலை தவிர்ந்து ஏனை எல்லாப்பொருட்களும் எமது அமைப்பின் மூலம் கொடுத்து இலவசமாக பயிற்சியை வழங்குகின்றோம். அவர்கள் பயிற்சி பெற்ற பின்பு தமது தேவைகளை தாமே பூர்த்தி செய்து கொள்ள பெரும் உதவியாக இருக்கும் இப்பயிற்சி…
அதேபோல் எமது அமைப்பின் மூலம் LIFE LIGHT தொண்டு நிறுவனம் தந்த 2மடிக்கணனி மூலம் தலைமன்னார் கிராமத்தில் உள்ள பெண்களுக்கான கணனி அறிவினை மேம்படுத்தும் விதமாக பயிற்சிகளை வழங்கி வருகின்றோம் பயிற்றுணராக றிச்சட் இருக்கின்றார்.
உங்களால் என்ன பொருட்கள் செய்ய முடியும்.........
எல்லாவிதமான பொருட்களையும் செய்வேன்
பாய் பல அளவுகள் -சுளகு-நீற்றுப்பெட்டி-பெட்டி-கடகம் பல அளவுகள்-கான்வாக்-HAND BAG கூடைகள் கைப்பைகள் சின்ன அடுக்குப்பெட்டிகள் திருகணி-இடியப்பத்தட்டு- தளவிரிப்புக்கள் புச்சாடிகள் தொப்பிகள் இன்னும் பலவுள்ளது உங்களுக்கு என்ன தேவை அந்த மொடல் உருவம் எமக்கு தந்தால் நிங்கள் விரும்புகின்ற படியே தேவையானவற்றை செய்து தருவேன் என்னால் முடியும். அதிலும் நான் லெதர் பயிற்சி பெற்றிருப்பதால் அதனையும் கைப்பணியுடன் இணைத்து அதிகமான கைப்பகைள் அதிகமாக செய்வேன்.உங்களின் கைப்பணி வேலைப்பாட்டிற்கு ஏற்றால் போல் பணம் கிடைக்குமா சில பொருட்கள் செய்ய அதிகநேரம் எடுக்கும் அல்லவா….
உண்மைதான் உதாரணமாக கூடை செய்வதற்கு குறைந்தது 1-1/2 ஒன்றரை நாள் வேண்டும் ஆனால் அந்தக்கூடை 350ரூபாய்க்குத்தான் விற்கமுடியும் அதுவும் கற்பகத்தினருக்கு கொடுப்பதென்றால் 300 ரூபாய்க்குத்தான் கொடுக்கலாம் சாதாரணமாக ஒருநாள் கூலி 1000 ரூபா என்றால் ஒன்றரை நாள் கஸ்ரப்பட்டு வெறும் 300 ரூபா போதுமானதாக இருக்குமா… பாய் ஒன்றின் விலை 1500 ரூபாய் தான் அந்தப்பாயில் குறைந்தது 3 கான்வாக்HAND BAG செய்யலாம் ஒரு கான்வாக்கின் பெறுமதி 1100 ரூபாய் அப்படி செய்தால் 3300 ரூபா கிடைக்கும் அல்லவா அதுதான் அதிகமாக நான் HAND BAG செய்கின்றேன் எனது வாழ்வாதாரத்தினை பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.
உங்களுக்கான தேவைகளை கேட்டறிவதற்கு கலந்துரையால்கள் செய்வதில்லையா…
ஏன் இல்லை அது நடக்கத்தான் செய்கின்றது ஒவ்வொரு முறையும் உங்கள் தேவைகள் என்ன குறைகள் என்ன என்று கேட்பார்கள் எழுதி எடுப்பார்கள் கையொப்பம் வேண்டுவார்கள் அவ்வளவு தான் எந்தப்பிரயோசனமும் இல்லை சமீபத்திலும் கூட்டம் நடந்தது அதே விடையம் தான் அதுபரவாயில்லை சிலவிடையங்கள் விளங்கவில்லை என்று கேட்டாலும் விளங்கப்படுத்தும் அளவில் அதிகாரிகள் இல்லை எங்கள் மன்னார் அதிகாரிகளைத்தவிர ஏனைய கிளிநொச்சி யாழ்ப்பாணம் வவுனியா போன்ற மாவட்டங்களின் அதிகாரிகள் தங்களின் பனைவள கைப்பணியாளர்களுக்காக எல்லர விதமாகவும் போராடுவாரகள் முழுமையான விடையங்களை தெளிவு படுத்துவார்கள் எங்களது அதிகாரிகள் தான் எதையுமே பெரிதுபடுத்துவதில்லை (பனைவளஅபிவிருத்தி அதிகாரி திருமகள் முயற்சியால் எமக்கான பனைவள கைப்பணியாளர்கள் அடையளஅட்டை கிடைத்தது குறிப்பிடத்தக்கது) அத்தோடு கூட்டம் கூட்டம் என்று கூப்பிட்டு எமது ஞாயிற்றுக்கிழமையும் நிம்மதியாக இருக்கவிடவதில்லை அந்த கூட்த்திற்கு போய் செலவிடும் நேரத்தில் ஒரு HAND BAG செய்தாலே 1100ரூபா உழைக்கலாம்.
;
மன்னார் பணைவளகைப்பணியாளர்களுக்கான நிலை எவ்வாறு உள்ளது.........
செல்லவே தேவையில்லை பெரிய பொறுப்புக்களில் எல்லாம் யாழ்ப்பானமாவட்த்தினைச்சேர்தவர்கள் தான் உள்ளார்கள் அதனால் எங்கள் தேவைகள் பிரச்சினைகள் போன்றவற்றை எவ்வாறு கதைப்பது அதைவிடக்கொடுமை கண்காட்சிகள் நடக்கும் போது எமக்கென்று தனியான இடம் தருவதில்லை யாழ்ப்பாண கைப்பணியபளர்களுடன் தான் சேர்த்து விடுவார்கள் அதானால் எமது கைப்பணி பொருட்களை பார்வையிட்டவர்கள் இது நன்றாக இருக்கின்றது நீங்கள் யாழ்ப்பாணமா…? யாழ்ப்பாணமா…? என ஒவ்வொரு கண்காட்சியிலும் கேட்கும் போது எமக்கு மிகவும் கவலையாகவுள்ளது. எமது அடையாளம் இல்லாமல் போகின்றது இதையும் எமது அதிகாரிகள் பொறுப்பானவர்கள் கண்டு கொள்வதில்லை நாம் முடிவெடுத்து கடந்த கண்காட்சியில் மன்னார் கைப்பணிப்பொருட்களை அடையாளப்படுத்துவதற்காக மன்னார் பெனர் கட்டினோம் அதுபோல இனிவரும் கண்காட்சிகள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு தனியாக இடம் ஒதுக்கித்தர வேண்டும் அத்தோடு எங்களுக்கென்று அடையாளப்படுத்தும் அமையாவிட்டால் எதிலும் கலந்து கொள்வதில்லை என முடிவு செய்துள்ளோம். வெற்றியோ தோல்வியோ எமது அடையாளம் எமது மன்னார் மண்ணே அதை விட்டுத்தரமாட்டோம்…
ஆரம்பத்தில் ஏழு பெண்களுடன் தொடங்கிய உதயம் பெண்கள் கைப்பணி அமைப்பு இன்று உதயம் கைப்பணி அபிவிருத்தி சங்கமாகிவெற்றிநடைபோடுகின்றது அதன் அங்கத்தவர்கள் 62…..
உங்களது உதயம் கைப்பணி அபிவிருத்தி சங்கத்தின் எதிர்காலத்திட்டம் என்ன…
எமது குழுவில் உள்ள 62 பெண்களும் தரமான முறையில் பொருட்களை உற்பத்தி செய்யுமளவிற்கு கைதேர்ந்த பின்பு மன்னார் அரசாங்க அதிபர் மற்றும் பிரதேசசெயலாளர் அவர்களிடம் சென்று மன்னாரில் முற்றுமுழுதாக பிளாஸ்ரிக்கை கூடைகளை தடைசெய்யக்கோருவோம் மன்னார் மக்களுக்கு தேவையான கூடைகளை நாங்களே செய்து கொடுப்போம். சிங்கள மக்கள் பனைகைப்பணிகளால் செய்யப்படுகின்ற பொருட்களை அதிகமாக விரும்பி வாங்கி உபயோகிக்கின்றார்கள் வெள்ளைக்காரர்களும் பயன்படத்துகின்றார்கள் ஏன் எங்களுடைய மக்கள் பாவிக்கமுடியாது
அவ்வாறு வாங்கி பாவிப்பதனால் எம்மைப்போன்ற வாழ்வாதாரத்திற்கு தொழிலாக கொண்டு இருக்கின்றவர்களின் வாழ்வை வளப்படுத்தும் அல்லவா சிந்தியுங்கள் கொஞ்சம்…
உங்களுடைய கைப்பணிப்பொருட்களின் பாவனைக்காலம் என்னவென்று சொல்ல முடியுமா…
அவர்அவர்களின் பாவனையைப்பொறுத்தது சுளகு 5வருடம் முதல் 8வருடம் பாவிக்கலாம் பாய் 2வருடம் முதல் 4வருடம் பாவிக்கலாம் இப்படியாக ஒவ்வோரு பொருளும் குறைந்தது ஒரு வருடத்தில் இருந்து பாவிக்ககூடியதாக இருக்கும்.HAND BAG ஒன்றின் விலை 1100ரூபா குறைந்தது ஒருவருடம் பாவிக்கும் போதாதா 30 ரூபாய்க்கு வாங்கும் நீற்றுப்பெட்டியே 3மாதம் பாவிக்கும் காணாதா….???
உங்களின் கவலை தரும் விடையம் என்றால்---
எனதும் என்னைப்போன்ற கைப்பணி உற்பத்திகளை தொழிலாகவும் வாழ்வாகவும் கொண்டு நம்பி இருக்கின்றவர்களின் வாழ்வின் பிரதான மூலப்பொருளான பனைவளத்தினை அழிக்கின்றார்கள் பணத்திற்காக திட்டமிட்டு அழிக்கின்றார்கள் அரைவாசி யுத்தத்தால் அழிந்தது மீதி மக்களின் பண ஆசையால் அழிந்து கொண்டிருக்கின்றது. இன்னும் 10 வருடங்களில் மன்னார் மாவட்டத்தில் முற்றுமுழுதாக பனையே இல்லாமல் அழிந்து போய்விடும் எங்கள் வாழ்வும்….???
நீங்கள் வாழ்வின் முதல் முதலாக மாவட்ட மட்டத்தில் பரிசு பெற்றுக்கொண்ட போது மகிழ்ச்சியாக…
இல்லை... இல்லை... ஏன் எனில் நான் கணவன் காணாமல் போனதில் இருந்து இன்றுவரை பல அவமானங்களை சந்தித்துள்ளேன் பழக்கமாகி போனவிடையம் அதனால் மகிழ்ச்சி எனக்கு இல்லை ஆனால் எனக்கு முதல் அடையாளம் என்பது எனது ஆசிரியர் பாவிலாஜி தந்த ஆசிர்வாதம் தான் அவர் எனக்கு முதலிடம் கிடைத்த போது அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை அவருக்கு 25வருட சேவையினை பாராட்டி கௌரவித்த வேளை எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியாக இருந்தது.
14வருட வாழ்க்கையின் சவால்களையும் தடைகளையும் எவ்வாறு தாங்கிக்கொள்ளுகின்றீர்கள்----
எனது கணவன் இல்லாது இந்த உலகில் வாழ்வது கொடிது அப்போது அப்பா என்னிடம் சொல்வது மகளே உனக்கு தாங்கமுடியாத சோகம் வரும் போது அழுகை வருவதாக இருந்தல் அழு அது தனிமையில் இருந்து அழு நீ அழுவதை யாரும் பார்த்தால் உன்னை கோழை என்று நினைப்பார்கள் ஏழையாக இருக்கலாம் கோழையாக இருக்ககூடாது. அப்பாவின் அறிவுரைகள் என்னிடம் உள்ளது அப்பா இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு ஒரு சுருக்கு கத்தி தந்தார் இதை வைத்துக்கொள்ளு பாதுகாப்பாக இருக்கும் என்றார். கேள்விக்குத்தான் பதில் சொல்லனும் சும்மா யாருக்கும் பதில் சொல்லாதே.... அப்பாவின் வார்த்தைகளை வாழ்வின் தைரியமாக செயற்பட ஊக்கமிளிக்கின்றது. எதிலும் தோற்றுவிடக்கூடாது என்பது எனது எண்ணம் ஏன் எனில் எனது வாழ்வில் தோற்றுப்போய் விட்டேன் இனியாவது தோற்காமல் இருக்க துடிப்புடன் இயங்கிக்கொண்டு இருக்கவேண்டும்.
உங்கள் வாழ்வில் முன்மாதிரியாக யாரை…
எனது முன்மாதிரி எனும் போது என்னைப்போலவே யாருடைய உதவியுமின்றி தனது முயற்சியாலும் தன்னம்பிக்கையாலும் நல்ல இடத்தில் தனது குடும்பத்தினை வைத்திருக்கும் திருமதி ஜேந்தி ஆசிரியர் இரண்டு தடவை கைப்பணிக்காக தேசிய சில்பா விருது பெற்றவர் பனைவள அபிவிருத்தி அலுவலராக பணியாற்றுகின்றார். அவர் ஒவ்வொரு முறையும் மேடைகளிலும் பேசும் போது தனது வாழ்வை உதாரணம் வைத்து பெண்கள் வாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டும் என்பதை பேசும் போதும் செயலில் காட்டும் போதும் அவரைப்போல வரவேண்டும் என்ற எண்ணம் உள்ளது தன்னம்பிக்கையில்.
எயிட்ஸ் தொற்று நோய் விழிப்புணர்வு பயிற்சி ஆசிரியராக செயற்படுவதாக சொன்னீர்கள் அது பற்றி….
பெண்களுக்கு வீட்டிலும் சரி நாட்டிலும் சரி பலவிதமான சொல்ல முடியாத துன்பங்கள் துயரங்கள் தான் வாழ்க்கையாகி உள்ளது அதில் ஒன்று தான் எயிட்ஸ் தொற்று போதியளவு தெளிவில்லாமையால் தான் பலபெண்களின் வாழ்க்கை சீரழிகின்றது அதைப்பற்றி நான் இங்கு சொல்ல விரும்பவி;ல்லை இந்தகற்கையினை கற்றுக்கொடுப்பது எனது தாய்க்கும் விருப்பம் இல்லை ஒரு முறை எனது தாய் உடல்நலக்குறைவு காரணமாக அநுராதபுரத்தில் வைத்திய சாலையில் இருந்தபோது காதல் தோல்வியால் விஷம் அருந்திய பெண்ணை அரைநிர்வாணத்தில் வைத்ததான் வைத்தியம் பார்த்திருக்கின்றார்கள் அதைப்பார்த்த எனது அம்மா உணர்ந்து கொண்டார். அந்தப்பெண்ணுக்கு விழிப்புணர்வு இருந்திருந்தால் இவ்வாறு நடந்திருக்காது அல்லவா... இந்த சந்தர்ப்பத்திற்கு பின்பு அம்மா என்னை மறிப்பதில்லை தொடர்கின்றேன் சேவையை திருகோணமலை வவுனியா நுவரேலியா யாழ்ப்பாணம் தலைமன்னார் போன்ற இடங்களுக்கு சென்று விழ்ப்புணர்வு கருத்தரங்குகளை செய்துள்ளேன் செய்தும் வருகின்றேன்.
தங்களுக்கான தேவையாக கருதுவது….
என்னைப்போன்ற பனைவள கைப்பணி தொழிலாளர்களின் உற்பத்திப்பொருட்களை விற்பனை செய்வதற்கு வியாபாரநிலையம் ஒன்று தேவை அதை யாரும் பெற்றுத்தருவதாக இல்லை அன்னாசிப்பழம் விற்கிறவங்களுக்கு கூட இடம் கொடுக்கின்றார்கள் எங்களைப்போன்றவர்களுக்கு கொடுப்பதில்லை மன்னார் பாலத்தின் அருகில் ஒரு இடத்தினை தந்தால் எமது உற்பத்திப்பொருட்களை விற்பனை செய்து எமது வாழ்வாதாரத்தினை மேம்படுத்த முடியும் மன்னார் கச்சேரிக்கு பின்பக்கமாக இருந்த கற்பக பனைவள விற்பனைநிலையமும் இல்லை இருந்தால் நன்மையே…
தங்களின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்களைப்பற்றி…
எனது அப்பா அம்மா எனது ஆசிரியர் திருமதி பாவிலாஜி ஆசிரியர் திருமதி ஜேந்தி இவர்களுடன் GS-சுதர்சன் RDO MANNAR-வைக்குறோ Y-GRO மெடோசன் அண்ணா நிமலதாசன் அண்ணா உதயன் அண்ணா NECLEUS நோயல் அண்ணா RDO-ரங்கநாயகி RDO-திருமகள் எமக்கான கணனி சார்ந்த விடையங்களில் உதவி புரியும் தம்பி றிச்சட் இன்னும் பலர் எனது வாழ்வுப்பயணத்தில் உதவியாகவும் ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர்.
இதுவரை எம்மோடு பயணிக்கும் நிறுவனங்களில் சில
- KEDAT
- FOSDO
- Y-GRO
- NECLEUS
- USAID
- LIFE LIGHT GS
- RDO
- WRDO
மன்னார் கலைஞர்களின் திறமைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் நியூமன்னார் இனையம் பற்றி தங்களின் கருத்து----
உங்களின் சேவை தொடர வேண்டும் என்னைப்போன்றவர்கள் மன்னார் மாவட்டத்தில் கண்டுகொள்ளமல் மறைமுகமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் அவர்களையும் வெளிக்கொணரவேண்டும் அதற்கு வை.கஜேந்திரனாகிய உங்களுக்கும் உங்களது இணைய நிர்வாகிக்கும் எனதும் எனகுழுவினதும் மனமார்ந்த வாழ்த்துக்கள் எனது குழுவினரையும் தெரியப்டுத்துவீர்கள் என நம்பி மகிழ்வுடன் பாராட்டி நிற்கின்றேன்….
நியூமன்னார் இணையத்திற்காக....
-வை.கஜேந்திரன்-

கலைஞனின் அகம் கணணியில் முகம்...
Reviewed by Author
on
November 18, 2016
Rating:

No comments:
Post a Comment